7.7.10

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் புரக்கனிப்பா...! எதிரிகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை

தலைமைகழக செய்தி


பிரதமரைச் சந்திக்கச் சென்ற குழுவில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ஏன் செல்லவில்லை? அவரை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். அல்தாபி தனது குடும்பத்தை திருச்சிக்கு மாற்றிய போதும் அவரைப் புறக்கணிப்பதாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

இத்தகைய சந்தேகம் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு இருந்தால் விளக்கம் கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கு பதில் சொல்லும் கடமை ஜமாஅத்துக்கு உண்டு.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேராதவர்கள் இது பற்றி கேள்வி எழுப்ப எந்த உரிமையும் இல்லை. ஒரு இயக்கத்தில் யாரை எதற்குப் பயன்படுத்துவது என்பதை அந்த இயக்கம் தான் முடிவு செய்யும். அந்த இயக்கத்தின் நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு எடுக்கும் முடிவு தான் அந்த இயக்கத்தின் முடிவாகும். இதைப் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தில் ;அங்கம் வகிக்காத எவருக்கும் கேள்வி கேட்க உரிமை இல்லை. அவர்களுக்கு பதில் சொல்லும் அவசியம் ஜமாஅத்துக்கும் இல்லை.

இது தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மட்டுமுள்ள நிலைபாடு அல்ல. எந்த ஒரு இயக்கத்தின் நிர்வாக முறை பற்றியும் அந்த இயக்கத்தைச் சேராத எவரும் கேள்வி கேட்க முடியாது.

மற்றவர்களைப் பாதிக்கும் காரியத்தை ஒரு இயக்கம் செய்தால் அது பற்றி அந்த இயக்கத்தில் இல்லாதவர்கள் கேள்வி கேட்கலாம். அல்தாபி பிரதமரைச் சந்திக்கும் குழுவில் இடம் பெறாதது இந்த இயக்கத்தில் இல்லாதவர்களை எந்த வகையிலும் இது பாதிக்கப் போவதில்லை.

தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக் குழு விரும்பினால் சாதாரண உறுப்பினரிடம் கூட ஒரு பொறுப்பை ஒப்படைக்கும். முக்கியமான நிர்வாகி ஒருவருக்கு பொறுப்பை ஒப்படைக்காமலும் இருக்கும். ஒரு பொறுப்பை யார் சிறப்பாகச் செய்வார்கள் என்பது பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தினராகிய நாங்கள் தான் கவலைப்பட வேண்டுமே தவிர எங்கள் எதிரிகள் இது பற்றி கவலைப்படத் தேவையில்லை. தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து எதிரிகளுக்கும் நமது ஒரே பதில் இது தான்.

அடுத்ததாக தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சிலருக்கு இது குறித்து சந்தேகம் இருக்குமானால் இது குறித்து மேலண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா அவர்கள் வெளியிட்டுள்ள கீழ்க்கண்ட அறிக்கை அந்த சந்தேகங்களைப் போக்கும்.

மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானியின் அறிக்கை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து உறுப்பிர்களுக்கும் மேலாண்மைக் குழு சார்பாக இந்த விளக்கத்தை அளிக்கின்றேன்.

பி. ஜே. யும் முந்தைய நிர்வாகிகளும் பொறுப்பில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்ட போது எம்.ஐ. சுலைமான் அவர்கள் பொதுக்குழுவில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். தன்னால் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடியவில்லை என்று திரும்பத் திரும்ப அவர் வலியுறுத்தி தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதால் அவரைத் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றி அல்தாபி தலைவர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். அவர் இப்பொறுப்பை ஏற்க மறுத்தாலும் அனைவரின் வற்புறுத்தல் காரணமாக பெரும் தயக்கத்துடன் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பொறுப்பேற்ற சில நாட்களில் இப்பொறுப்பை என்னால் சுமக்க முடியவில்லை என்று மூன்று முறை பி.ஜே. அவர்களின் இல்லம் சென்று தலைமைப் பொறுப்பில் இருந்து எப்படியாவது தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு கீழ்க்கண்ட காரணங்களையும் சொன்னார்.

வாரத்தில் ஐந்து நாட்கள் வெளியூர் பிரச்சாரம் செய்து விட்டு இரண்டு நாட்கள் மட்டும் நான் சென்னையில் இருப்பதால் நிர்வாக விஷயத்தை என்னால் கவனிக்க முடியவில்லை. கடிதங்கள் தேங்குகின்றன. என்னை எதிர்பார்த்து சில முடிவுகள் தாமதமாகின்றன. மேலும் போலீஸ் பிரச்சனை, போராட்டங்கள் போன்றவற்றில் முன்பு இருந்ததை விட தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. நான் போகும் இடங்களில் எல்லாம் பி. ஜே. யாகிய நீங்கள் தலைவராக வேண்டும் என்று மக்கள் விரும்புவதை நான் உணர்கிறேன். எனவே என்னை விடுவித்து இப்பொறுப்பை நீங்கள் எற்றுக் கொள்ளுங்கள் எனவும் பி. ஜே.யிடம் அவர் கூறினார்.

அதற்கு பீஜே அவர்கள் “நான் தலைவராவது பற்றிய பேச்சை விட்டு விடுங்கள். உங்கள் பொறுப்பில் குறையில்லாமல் நீங்களே செய்ய முடியும். இது எளிதானதே. உங்களுக்கான கூட்டங்களைக் குறைப்பதன் மூலமும் தேவையான உதவியாளர்களை நியமிப்பதன் மூலமும் உங்கள் பணியை தொய்வு இல்லாமல் செய்ய முடியும்’’ என்று கூறி தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதன் பின்னர் சில நாட்களில் மீண்டும் பி. ஜே.யின் வீட்டுக்கு அல்தாபி வந்து ஜமாஅத்தின் நன்மையைக் கருதி என் பொறுப்பை மாற்றி எனக்கு வேறு பொறுப்பு கொடுத்து உதவுங்கள் என்று கேட்டார். அப்போதும் பி. ஜே. தேவையான ஆலோசனை சொல்லி அனுப்பினார். மூன்றாம் தடவையும் இதே கோரிக்கையை அவர் பி. ஜே. இல்லம் சென்று உறுதிபட வலியுறுத்தினார். அப்படியானால் நிர்வாக்குழு மேலான்மைக் குழு கூட்டுக் கூட்டத்தில் இதைத் தெரிவியுங்கள். நான் ஒன்றும் செய்ய இயலாது என்று பி. ஜே. கூறி விட்டார்.

இப்படி மூன்றாம் தடைவை அல்தாபி உறுதியாகச் சொன்ன பிறகு தான் மேலாண்மைக் குழுத் தலைவராகிய என்னிடம் பீஜே நடந்தவைகளைத் தெரிவித்தார்.

இதன் பின்னர் நிர்வாகக் குழுவும் மேலாண்மைக் குழுவும் கூடிய போது அல்தாபி தனது கோரிக்கையை முன்வைத்தார். நிர்வாகக் குழு உடனடியாக அதை ஏற்றுக் கொள்ளாமல் சொல்ல வேண்டிய ஆலோசனைகளைச் சொன்னார்கள். ஆனாலும் பிடிவாதமாக அல்தாபி மறுத்து விட்டார்.

பி. ஜே. மீண்டும் பொறுப்பேற்பது தான் சரியான தீர்வு என்று அனைவரும் வலியுறுத்திய போது அவர் அடியோடு மறுத்து விட்டார். இதற்கான காரணங்களையும் அவர் விளக்கினார்.

இதன் பின்னர் தலைவர் மாற்றம் இல்லாமல் புதிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை இரண்டு பணிகள் உள்ளன.

ஒன்று கொள்கைப் பிரச்சாரப்பணி.

மற்றொன்று நிர்வாகம், போராட்டம் போன்ற பணிகள்.

அல்தாபி அவர்கள் நிர்வாகப் பணியைத் தான் சுமையாகக் கருதுகிறார். பிரச்சாரப் பணியை அவர் சுமையாகக் கருதவில்லை. எனவே அவர் தலைவராக இருந்து தஃவா பணியை திட்டமிட்டு சிறப்பாகச் செய்யட்டும். அலுவலக நிர்வாகம், அதிகாரிகள் சந்திப்பு போரட்டங்கள், போலீஸ் பிரச்சனைகள் போன்ற அனைத்தையும் துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா அவர்கள் தலைமை ஏற்று வழிநடத்தட்டும் என்பது தான் அந்த முடிவு.

இந்த முடிவை அனைத்து நிர்வாகிகளும் ஒரு மனதாக ஒப்புக் கொண்டனர். இதன் பின்னர் நிர்வாகப் பொறுப்பு என்ற காரணத்துக்காகத் தான் நான் சென்னையில் குடும்பத்தைக் குடியமர்த்தினேன். அந்த பொறுப்பு இல்லாததால் என் பிரச்சாரப் பணியைச் செய்ய தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் நான் தங்கிக் கொண்டால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குறைந்த நேரத்தில் சென்று வர முடியும் என்று அல்தாபி கூறியதையும் விவாதத்திற்குப் பின் மேலாண்மைகுழு நிர்வாகக் குழு கூட்டுக் கூட்டம் ஏற்றுக் கொண்டது.

நிர்வாகக் குழுவில் எடுக்கப்பட்ட இந்த முடிவை ஜூன் ஆறாம் தேதி சென்னையில் நடந்த மாநில செயற்குழுவில் அல்தாபியே விளக்கிக் கூறினார். அதை மாநில செயற்குழுவும் ஒப்புக் கொண்டது.

அதன் படி தான் கோவை ரஹ்மத்துல்லா அவர்கள் தஃவா பணி தவிர அனைத்துப் பணிகளுக்கும் தலைவர் என்ற தகுதியில் இருந்து செயல்பட்டு வருகின்றார். இந்த மாநாடும் பேரணியும் கூட அவரது தலைமைப் பொறுப்பில் தான் சிறப்பாக நடந்து முடிந்தது.

அடுத்து நம் ஜமாஅத்தைப் பொறுத்த வரை பொறுப்பில் யார் இருக்கின்றார்கள் என்பது எப்போதும் பிரச்சனையாக இருந்ததில்லை. இன்ஷா அல்லாஹ் இனி மேலும் இருக்காது. ஸைபுல்லாஹ் ஹாஜா தலைவராக இருந்தார். தலைவர் பொறுப்பில் இருந்து அவர் மாற்றப்பட்ட பின் அப்பொறுப்பில் இல்லாவிட்டாலும் அவரது ஒத்துழைப்பில் எந்தக் குறைவும் இல்லை.

இதன் பின்னர் பீஜே தலைவராக இருந்து இப்போது அப்பொறுப்பில் இல்லாததால் அவரது ஒத்துழைப்பில் எந்தக் குறையும் இல்லை. மாநாட்டுக் குழுவின் தலைவராக இருக்குமாறு நிர்வாகக் குழு கேட்டுக் கொண்ட போது அதை ஏற்று குறைவின்றி மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.

அதே போன்று எம்.ஐ. சுலைமான்ன தலைவராக இருந்து இப்போது தலைவராக இல்லாததால் அவரது ஒத்துழைப்பிலும் எந்தத் குறையும் இல்லை.

அது போல் அல்தாபி அவர்களிடம் இருந்த நிர்வாகப் பொறுப்பு அவரது கோரிக்கைக்கு இணங்க சில மாற்றப்பட்ட பிறகும் ஜமாஅத்திற்காக அவர் உழைப்பது அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை. மாநாட்டுக்காக பிரமுகர்களை அழைக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்ட போது அதை அவர் ஏற்று செயல்படுத்தினார்.

இன்னும் சில சந்தேகங்களையும் மேலாண்மைக்குழு சார்பில் நான் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

ஜூலை நான்கு பேரணி மாநாட்டில் அல்தாபி அவர்கள் ஏன் உரை நிகழ்த்தவில்லை என்ற சந்தேகத்திற்கு விளக்கம் இது தான்.

மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கும் பொழுது முக்கியத்துவம் வாய்ந்த பேரணிக்கு அல்தாபி தலைமை தாங்கி உரையாற்றுவார் என்று முடிவு செய்யப்பட்டு அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட்டது. எனவே தான் பொதுச் செயலாளா; ஒரு அமர்விற்கும், மேலாண்மைக் குழுத் தலைவராகிய நான் இறுதி அமர்விற்கும் தலைமை தாங்குவது என்று பொறுப்புக்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

மாநட்டின் நிறைவுரையைத் தலைவர் நிகழ்த்தாமல் பி. ஜே. ஏன் நிகழ்த்தினார் என்றும் சிலருக்குச் சந்தேகம் இருக்கலாம். மாநாட்டிற்கு யார் நிகழ்வுரை நிகழ்த்துவது என்ற ஆலோசனை செய்யும் பொழுது சகோ. பி. ஜே. அவர்களுக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் சகோ. பி. ஜே. அவர்கள் கண்டிப்பாக உரை ஆற்ற முடியாது என்று பல முறை மறுத்தார். மாநாட்டின் சிறப்பு அம்சமே இறுதி உரை என்பதாலும், உளவுத் துறையில் இருந்து அதிகார வர்க்கம் வரை இதனையே கூர்மையாகக் கவனிப்பதுடன் மேலிடத்திற்கும் செல்ல வேண்டிய தகவல்களைத் தெரிவிக்க முடியும் என்று வலியுறுத்தி பீஜேயை நிர்வாகம் சம்மதிக்க வைத்தது. மக்களுடைய எதிர்பார்ப்பும் இது தான்.

பிரதமர், முதல்வர் போன்ற பெரிய பொறுப்பில் உள்ளவர்களைச் சந்திக்கும் பொழுதும், சகோ. பி. ஜே. அவர்களின் ஆற்றலை ஜமாஅத் பயன்படுத்திக் கொள்கின்றது. இது விசயத்தில் நிர்வாகமே முடிவு எடுத்துவருகின்றது. இப்போது பிரதமரைச் சந்திக்கும் குழுவில் இடம் பெறவும் பீஜே மறுத்தார். நாம் தான் வற்புறுத்தி அவரை சம்மதிக்க வைத்தோம்.

பிரதமரைச் சந்திக்கும் குழுவில் அல்தாபி இடம் பெறாதது ஏன்? என்று யாருக்காவது சந்தேகம் இருக்குமானால் அதற்குறிய விளக்கம் இதோ.

பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களின் அலுவலகத்தில் இருந்தும் சந்திப்பதற்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நன்கு நபர்களுக்கு அழைப்பு வந்தது. இந்த அழைப்பு இரவு 9.00 மணிக்குத் தான் வந்தது. நமக்கென நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பிரதமரைச் சந்திக்க வேண்டுமானால் ஆறு முதல் ஏழு வரை உள்ள விமானத்தில் சென்றால் தான் அது சாத்தியமாகும்.

யார் சென்னையில் இருக்கிறார்களோ அவர்களில் சிலரை அவசரமாகத் தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டது. இந்த அழைப்பு வரும் போது அல்தாபி திருச்சியில் இருந்ததால் அவரால் உடனே சென்னை வரமுடியாது என்று கருதி அவரை நால்வரில் ஒருவராக சேர்க்கவில்லை.

பிரதமர் அலுவலக அழைப்பு கிடைப்பதற்கு முன் எட்டு மணிவரை நான் தலைமையில் தான் இருந்தேன். அதன் பின் புறப்பட்டு ஊர் செல்வதற்காக நான் குடும்பத்துடன் ரயில் நிலையத்துக்கு வந்த போது தான் இந்த செய்தியை பொதுச் செயலாளர் தொலை பேசிவழியாக எனக்குத் தெரிவித்து உடனே புறப்பட்டு வரச் சொன்னார்.

நான் குடும்பத்தினரை ரயிலில் அனுப்பி விட்டு 10.30 மணிக்குத் தான் வந்து சேர்ந்தேன். அல்தாபியை ஏன் அழைக்கவில்லை என்று நான் கேட்ட போது அவர் திருச்சியில் உள்ளதால் அவரால் உடனே வர முடியாது என்று பொதுச் செயலாளர் கூறினார். வரமுடியாது என்று நாமாக முடிவு எடுக்கக் கூடாது. அவரிடம் கேட்டுத் தான் முடிவு எடுக்க வேண்டும் என நான் கூறினேன். பொதுச் செயலாளர் உடனே அல்தாபியிடம் பேசினார். இப்போது புறப்பட்டால் காலை விமானத்தைப் பிடிக்க என்னால் முடியாது என்று அவர் கூறினார். பிஜேயிடம் இது பற்றி நான் தெரிவித்த போது அல்தாபியிடம் நீங்களே பேசி வாடகைக் கார் எடுத்துக் கொண்டாவது வரச்சொல்லி நிங்களே பேசுவது நல்லது என்று கூறினார். அதன் படி நானும் அல்தாபியிடம் பேசினேன். எப்படி புறப்பட்டாலும் என்னால் வந்து சேர முடியாது என்று என்னிடமும் கூறி விட்டார்.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை இது ஒரு பிரச்சனையே அல்ல. கொள்கை கோட்பாடுகள் விஷயத்தில் தான் இந்த ஜமாஅதுக்கு அக்கறை உள்ளது. நான் உட்பட தனி நபர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது பிரச்சனையாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கூறிக் கொள்கிறேன்.

அன்புடன்

ஷம்சுல்லுஹா

மேலாண்மைக் குழுத் தலைவர்

http://www.tntj.net/?p=17453

0 comments:

.