4.10.10

அலகாபாத் தீர்ப்பு- நல்லிணக்கம் போற்றும் சமுதாயத்திற்கு ஏமாற்றம்..! -M.அப்துல் ரஹ்மான் எம்.பி.

"அயோத்தியில் பாபரி மஸ்ஜிது இடிக்கப்பட்டது ஓர் அநியாயச் செயல்;அக்கிரமச் சம்பவம்;இந் நிகழ்வுக்குக் காரணமாகவும்,பின்புலமாகவும் இருந்தவர்கள் மிகப்பெரும் அளவில் தண்டிக்கப்படவேண்டியவர்கள்."என்று லிபரான் கமிஷன் அறிக்கை மிகத் தெளிவாகக் கண்டித்திருக்கிறது.




சமய சார்பற்ற நிலையில் நல்லுள்ளம் கொண்டோர் அனைவரும் வரவேற்றனர் இந்தத் தீர்ப்பை.



பாரத நாட்டின் பாரம்பரியமிக்க பாராளுமன்றம் லிபரான் கமிஷனின் இந்த பார்போற்றும் தீர்ப்பைப் பாராட்டியதோடு,அறிக்கையில் பட்டியலிடப்பட்ட குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும் என்ற பலதரப்பட்ட குரல்களையும் இந்திய அரசின் கவனத்திற்குப் பதிவு செய்தது.

மஸ்ஜிது இருந்த அந்த இடத்தின் உரிமையை சட்டப்பூர்வமாக நிலை நிறுத்தும் வழக்கின் தீர்ப்பு இப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.

" நீதி மன்றத்தின் தீர்ப்பு எதுவானாலும் அது மதிக்கப்பட வேண்டியது"என்பதில் நமக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

ஆனால் அநியாயமாகவும்,அக்கிரமமாகவும் வெறிச்செயலில் ஈடுபட்டுத் தகர்க்கப்பட்ட மஸ்ஜிது இருந்த இடத்தில் "ராமர் பிறந்த இடம்"என்று வம்பு செய்து அத்துமீறி சிலைகள் வைக்கப்பட்ட காரணத்தால் சட்டப்பூர்வமான எந்த பின்னணியும் இல்லாமல் மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே அந்த இடம் ராமர் பிறந்ததாகச் சொல்லுகிறது இந்த தீர்ப்பு.மேலும் அந்தக் குறிப்பிட்ட இடமே ராமர் கோயில் கட்டத்தகுந்த இடம் என்றும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுத் தீர்ப்பு வெளியாகியிருப்பது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விட்டதோ?என்கிற ஐயப்பாடு நாட்டில் நிலவுவதை மறுக்கவியலாது.



நீதிமன்றத் தீர்ப்பு என்பது ஆவணங்களின் அடிப்படையில் சட்டப்படியானத் தீர்வாகத்தான் இருக்க முடியும்.ஆவணங்கள் இல்லாத நிலையில் நிலத்தின் பயன்பாட்டுக் காலத்தையே பெரிதும் கவனத்திற்குரியதாக எடுத்துக் கொள்ளப்பட்டுத் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருவதைப் பரவலாகக் காண்கிறோம்.

ஆனால் இந்த அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு,பாதிக்கப்பட்ட உள்ளங்களின் நியாயமான எதிர்பார்ப்பை முழுமைப் படுத்துவதாக இல்லை என்பது பெருத்த ஏமாற்றம்தான்.



இது இப்போது மேல் முறையீடு என்ற உரிமையில் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லுகிறது."காலம் நீட்டிக்கப்பட்டாலும் எதிர்பார்க்கப்படும் நியாயமான தீர்ப்பு இறுதியில் வெளிச்சத்துடன் வெளிவரும்"என்பது மனசாட்சியுள்ளோர் அனைவரும்,இந்தியாவின் இறையாண்மையில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும், நீதிமன்றங்களில் சத்தியம் நிலை நிறுத்தப்படும் என்று நம்புவோர்கள் அனைவரும் மதம் கடந்து மனித நேயம் போற்றும் சான்றோர் யாவரும் எதிர்பார்க்கும் யதார்த்த நிலை.



தர்மத்தினை சூது கவ்வலாம்,ஆனால் இறுதியில் தர்மம் வெல்லுவதுதானே நியாயம்?அதுவே ஒரு நல்ல நிறைவான தீர்வாக அமையும்!.இந்த நல்ல நம்பிக்கையுடன் காத்திருப்போம்.!

0 comments:

.